×

மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி


புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் மக்களவை தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.அதற்கான காரணம் என்ன என்று அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று இரண்டாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்து விட்டது.

வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கிறோம். அப்போது அமலாகத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்க வேண்டும். குறிப்பாக நாங்கள் தற்போது ஒருசிலை கேள்விகளை தருகிறோம். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் விரிவான விளக்கங்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அமலாக்கத்துறைக்கான கேள்விகள் :
* பொது தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதற்காக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
* கிரிமினல் நடவடிக்கை என்பது ஒருவர் மீது தனித்து இருக்க முடியுமா?.
* இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றவியல் நடவடிக்கையை தொடங்க முடியுமா?. அதற்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள் என்ன?.
* புதிய மதுபான கொள்கை நடைமுறையை தொடங்குவதற்கும், மீண்டும் புகார்கள் தாக்கல் செய்தமைக்கான இடைவெளி என்ன ஆகியவை குறித்து அமலாக்கத்துறை தரப்பில் வரும் வெள்ளிக்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி
டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மக்களவை தேர்தல் பணிகளை கவனிக்கும் விதமாக வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மணீஷ் சிசோடியா தாக்கல் செய்திருந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

The post மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Lok Sabha elections ,Supreme Court ,New Delhi ,Chief Minister ,Delhi ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!